லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. 

இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் படத்தின் டீசரையாவது வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மாஸ்டர் படத்தின் டீசர் தற்போது 5 கோடி பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் இந்தி டைட்டில் பற்றியும், இந்தி விநியோகம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. விஜய் தி மாஸ்டர் என இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. XB பிலிம்ஸுடன் இணைந்து B4U மோஷன் பிக்ஸ் என்ற நிறுவனம் இந்தியில் வெளியிடுகிறது. 

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிட உள்ளதாக மாஸ்டர் படத்தின் குழு ட்விட்டரில் அறிவித்திருந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த செய்தி தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஒடிடி நிறுவனங்கள் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டிய போதும் படத்தின் தயாரிப்பாளர் லலித் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். தமிழகத் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 100% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். 

இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் அண்மையில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் நேரடியாக சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்தார் என்று கூறப்பட்டது.