தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் அனிதா சம்பத். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

கடந்த வாரம் தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து அனிதா எலிமினேட் செய்யப்பட்டார். அவர் இந்த சீஸனின் முக்கிய போட்டியாளராக இருந்து வந்த நிலையில் அவரது திடீர் எலிமினேஷன் சற்று அதிர்ச்சி அளித்தது எனலாம். இந்நிலையில் மேலும் பேரதிர்ச்சி தரும் செய்தியாக அனிதா சம்பத்தின் அப்பா ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். 

தனது மகனுடன் ஷீர்டி சென்று திரும்பிக்கொண்டிருந்த அவருக்கு ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது. ஆர்சி சம்பத்தின் உடல் தற்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வர படுகிறது.

அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும்போதே கமலிடம் தன் அப்பா எழுத்தாளராக அதிகம் புகழ்பெற முடியாமல் போனது பற்றி பேசி இருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் கடந்து வந்த பாதையை பற்றி பேசும்போது தான் இளம் வயதிலேயே சந்தித்த வறுமையை பற்றி கலக்கத்துடன் பேசி இருந்தார்.

பிக் பாஸ் 4ல் இருந்து எலிமினேட் ஆகும் போது அனிதா தன் கணவர் மற்றும் குடும்பத்தை மீண்டும் பார்க்கப்போகிறேன் என்கிற மகிழ்ச்சியில் தான் சென்றார். ஆனால் தற்போது அவருக்கு பேரதிர்ச்சியாக அப்பாவின் மரணம் வந்திருக்கிறது. பிக் பாஸில் இருந்து சென்ற பிறகு இன்னும் அனிதா அவரை சந்திக்கவே இல்லை என கூறப்படுகிறது. அனிதா சம்பத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.