கோலிவுட்டில் ரசிகர்கள் விரும்பும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சியான் விக்ரம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

இன்று இசைப்புயலின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இத்துடன் கோப்ரா டீஸர் தேதியையும் வெளியிட்டனர். வரும் ஜனவரி 9-ம் தேதி கோப்ரா டீஸர் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சியான் விக்ரம். 

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. 

இசைப்புயல் AR ரஹ்மானின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி பிலே லிஸ்ட்டை ரூல் செய்தது. இந்த படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபுறம் நடந்து வந்தது. படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் இர்ஃபான் பதானின் கேரக்டர் லுக் போஸ்டரும் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்தது. அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார் பதான். 

சமீபத்தில் கோப்ரா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கணக்கியல் ரீதியான தீர்வு உள்ளது என்று கேப்ஷன் போடப்பட்டுள்ளது. நரம்புப் புடைக்க, தலைமுடியை விரித்துப் போட்டபடி இருந்தார் சியான். 

கோப்ரா படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம் இணையவுள்ளதாக தகவல் தெரியவந்தது. சியான் விக்ரம் கைவசம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சியான் 60 படமும் உள்ளது.