2021 புத்தாண்டு அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இது சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட இரு மடங்கு உயர்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே சீனாவில் தான் மக்கள் தொகை அதிகம் என்று, நம் அனைவருக்கும் தெரியும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2 வது இடத்தில் இருப்பதும் தெரியும். இந்த 2 வது இடம் என்பது, எந்த நேரத்திலும் சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்திற்குச் செல்லலாம் என்றும் பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வரும் ஒரு விசயம் தான். அதற்கு வலு சேர்க்கிறது. புத்தாண்டு அன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நிதியமான யுனிசெஃப் அமைப்பு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன் படி, 2021 புத்தாண்டு அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உலகிலேயே இது தான், அதிகம் என்றும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்தியாவில் தான் பிறந்துள்ளது என்றும், யுனிசெஃப் சுட்டிக்காட்டி உள்ளது.  

உலகம் முழுதும் ஆங்கில புத்தாண்டு அன்று, அனைத்து மக்களும் கோலாகலமாகக் கொண்டாடி வந்தனர். அதே தினத்தில் உலகம் முழுவதும் மிகச் சரியாக 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது.

இந்த எண்ணிக்கையில், 52 சதவீத குழந்தைகள் மட்டும் குறிப்பிட்ட 10 நாடுகளில் பிறந்துள்ளதாகவும், யுனிசெஃப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில், 2021 புத்தாண்டு தினத்தன்று, 33615 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு மட்டும் சுமார் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என்றும், யுனிசெஃப் அமைப்பு கணக்கிட்டுள்ளது.

அதே போல், 2021 புத்தாண்டு தினத்தன்று நைஜீரியா நாட்டில் 21 ஆயிரத்து 439 குழந்தைகளும், பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 161 குழந்தைகளும் பிறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது.

மேலும், இந்தோனேஷியா நாட்டில் 12,336 குழந்தைகளும், எத்தியோப்பியா நாட்டில் 12,006 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,312 குழந்தைகளும், எகிப்து நாட்டில் 9,455 குழந்தைகளும், வங்கதேசத்தில் 9,236 குழந்தைகளும், காங்கோ நாட்டில் 8,640 குழந்தைகளும் புத்தாண்டு தினத்தன்று பிறந்துள்ளதாகப் பதிவாகி உள்ளது.

முக்கியமாக, 2021 ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது என்று, யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த 2021 ஆண்டில் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 84 
ஆண்டுகளாக இருக்கும் என்றும், அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யுனிசெஃப் அமைப்பின் இந்தியாவின் பிரதிநிதியான யாஸ்மின் அலி ஹக் கூறுகையில் “குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியதன் லாபத்தைப் பெற வேண்டுமானால், கொரோனாவில் ஏற்பட்ட தாக்கத்தையும், அதன் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்வதும் மிக அவசியம்” என்று, வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “இந்த கொரோனா தொற்றில் மட்டுமல்லாமல், அனைத்து நேரங்களிலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதற்கான கொள்கைகள், அமைப்பு முறை அவசியம் என்பதை கொரோனா தொற்று நமக்கு உணர்த்திவிட்டது” என்றும், அவர் கூறியுள்ளார்.