ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற ரெய்டில் பிரபல நடிகை ஷ்வேதா குமாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு, பாலிவுட் சினிமா உலகில் போதைப் பொருள் விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு, பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தாலும், இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உள்ளிட்ட சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பிரபல நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலிகான், ராகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கும், போலீசார் சம்மன் தொடர்ந்து அனுப்பிய நிலையில், அவர்கள் அனைவரும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.

இதுமட்டும் இல்லாமல், கன்னட சினிமா உலகில் பிரபல நடிகைகளாக வலம் வந்த ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும், போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில், நடிகை சஞ்சனாவுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் கிடைத்தது. இதன் காரணமாக, இந்திய சினிமா உலகில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டு வருவது பட்டவர்த்தனமாக வெளி உலகிற்கு தெரிந்துள்ளதால், இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், தெலுங்கு நடிகையான 27 வயதான ஷ்வேதா குமாரியை நேற்று இரவு அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

முக்கியமாக, மும்பை, தானே மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் நடிகை ஷ்வேதா குமாரிக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும், போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஷ்வேதா குமாரி, கன்னடத்தில் “ரிங் மாஸ்டர்” உட்பட சில படங்களிலும், தெலுங்கு சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து வந்தார். 

இந்த வழக்கில், இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே பேசும் போது, “ஐதராபாத்தைச் சேர்ந்த ஷ்வேதா குமாரி என்பவருக்கு குறிப்பிட்ட ஒரு ஒரு வகையான போதைப் பொருள் விற்கும் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து, நாங்கள் அவர் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் ரெய்டு நடத்தினோம் என்றும், இதனையடுத்து அவரை நாங்கள் கைது செய்து உள்ளோம்” என்றும், அவர் கூறினார்.
 
அத்துடன், “இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றும், முழுமையான விசாரணைக்குப் பிறகே மற்ற தகவல்கள் தெரிய வரும்” என்றும், அவர் தெரிவித்தார். 

இதனிடையே, போதைப் பொருள் வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது இந்திய சினிமா வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.