17 வயது சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழந்த வழக்கில் அடுத்தடுத்து இரு காதலர்கள் சிக்கி உள்ள நிலையில், இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அடுத்து உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தாய் - தந்தை இல்லாத நிலையில், தன்னுடைய தாத்தா - பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தேனியில் 12 ஆம் வகுப்பு வரை படித்து வந்த அந்த மாணவி, உயர் படிப்பிற்காகக் கரூர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் தற்போது இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அப்போது, ஒரு இளைஞரை அந்த மாணவி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த மாணவி அங்குள்ள போடி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு வந்தது வயிற்று வலி கிடையாது என்றும், மாறாக அது பிரசவ வலி என்றும் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு, மாணவியை அழைத்துச் சென்றவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

அத்துடன், அந்த மாணவிக்கு பிரசவ வலி அதிகமாகவே, அவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, அந்த மாணவிக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. முக்கியமாக, மாணவிக்கு பிரசவத்திற்குப் பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உயர் சிகிச்சைக்காக அந்த மாணவியும், குழந்தையும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அந்த மாணவிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனாலும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிறந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டு இன்குபேட்டர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதே போல், உயிரிழந்த மாணவியின் நிலைமை குறித்து விரைந்து வந்த மாணவியின் தாத்தா, கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், “தங்கள் ஊரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் எனது பேத்தியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்திருக்கலாம்” என்று சந்தேகப்படுவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது புகார் குறித்து போடி ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் செல்போன் எண்ணில் தொடர்பிலிருந்த நபர்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றுடன், சிறுமியின் தாத்தா குறிப்பிட்ட 2 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அத்துடன், அந்த இரு இளைஞர்களையும், டிஎன்ஏ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தியதாகவும் கூறப்பட்டது. 

மிக முக்கியமாக, “தனது பேத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம்” என்று, அவரது தாத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்து தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், நாகலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில், மேலும் சிலருக்குத் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.