இந்திய கால்பந்து அணியில் 16 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம் செய்யப்பட்டுள்ள பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ள நிலையில், இந்த நிலைமை, இந்திய கிரிக்கெட்டிற்கும் வரலாம் என்றும், பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

“நாங்க உங்கள் மீது வச்ச நம்பிக்கையை கூட, நீங்கள் உங்கள் மீது வைக்கவில்லையே?” என்று தான், இந்த நிகழ்வைப் பார்க்கும் போது சொல்லத் தோன்றுகிறது.

அதாவது, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில், இந்திய அணி சிறப்பாக விளையாடி ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 

இந்திய அணியின் இந்த தகுதிக்கு, ஜோதிடர்களின் ஊக்குவிப்பு தான் இதற்கு மிக முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது. இது குறித்த தகவல்கள் வெளியே கசித்த நிலையில், இது தொடர்பாக அந்த கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு மோட்டிவேட்டர் நியமிக்கப்பட்டு உள்ளார்” என்று, குறிப்பிட்டார். 

ஆனால், அந்த மோட்டிவேட்டர் யார் என்பது பிறகு தான் தெரிந்தது, “அது ஜோதிட நிறுவனம்” என்பது. 

அதாவது, “அகில இந்திய கால்பந்து சம்மேளனம், இந்த மாத ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா தொடர்ந்து 2 வது முறையாக முக்கிய சுற்றுக்கு வருவதை உறுதி செய்வதற்காக, 3 மாத ஒப்பந்தத்தில் தெற்கு டெல்லியில் இருந்து ஒரு ஜோதிட நிறுவனத்தை நியமித்தது. 

இது குறித்து, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு, அகில இந்திய கால்பந்து சம்மேளன உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோதிட நிறுவனத்தில் ஈடுபடுவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய போது தான், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கே வந்தது. 

அதுவும், இந்திய கால்பந்து அணியை மோட்டி வேட் செய்ய, ஜோதிடரை நியமித்து, அந்த ஜோதிடர்களுக்கு 16 லட்சம் ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டு இருப்பது, வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குறிப்பாக, அந்த ஜோதிடரிடம் இந்திய கால்பந்தின் ஒட்டு மொத்த ஜாதகம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், வீரர்களின் தனிப்பட்ட ஜாதகமும் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், “இந்திய கால்பந்து அணியை மோட்டி வேட் செய்ய, ஜோதிடரை நியமிப்பதா?” என்பது, தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ளது.

இது குறித்து முன்னாள் இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ் பேசும் போது, “இந்திய கால்பந்து கூட்டமைப்பு உலக அரங்கில் பெரிய அளவில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது” என்று, கூறியுள்ளார். 

“இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரை தான் என்றும், நிர்வாகிகள் தங்கள் வெளிநாட்டு சொகுசுப் பயணத்துக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றும், அவர் கருத்து கூறி உள்ளார்.

முக்கியமாக, “இந்திய கால்பந்துக் கூட்டமைப்பில் ஏகப்பட்ட ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன என்றும், அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றும், மிக விரைவில் இவற்றை அம்பலப்படுத்த வேண்டும்” என்றும், முன்னாள் வீரர் தனுமாய் போஸ் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக இணையத்தில் எதிர்மறையான கருத்து தெரிவித்து வரும் விளையாட்டு உலக ரசிகர்கள் பலரும், இந்திய கால்பந்து அணியைத் தொடர்ந்து இந்த ஜோதிடர் நியமனம், மிக விரைவில் இந்திய கிரிக்கெட்டிற்கும் வரலாம்” என்றும், பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.