தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே தோன்றினாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

முன்னதாக இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முக்கியமான சிறப்பு தோற்றத்திலும் சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் புதிய படத்திலும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த STUDIO GREEN தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்கள் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

மீண்டும் நடிகர் சூர்யா உடன் இணைவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "வெகு விரைவில் தொடங்க உள்ளோம். முன்னணி இயக்குனர் அந்த படத்தை இயக்க உள்ளார்" என தெரிவித்த ஞானவேல் ராஜா அவர்களிடம் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்து கேட்டபோது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன என தெரிவித்துள்ளார். 

"ஆனால் அந்த படத்தை STUDIO GREEN தயாரிக்கவில்லை, UV CREATIONS தயாரிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக UV CREATIONS  தயாரிக்கின்றனர். இத்திரைப்படம் விரைவில் தயாராகும் என தெரிவித்துள்ளார். பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் அந்த பேட்டி இதோ…