“அதிமுக பொதுக்குழு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் நடந்ததே செல்லாது” என்று, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் காட்டமாக பேசி உள்ளார். 

இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் கோபமாக வெளியேறிய நிலையில், “ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்று, இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், “அதிமுக பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம்” என்று, வைத்திலிங்கம் காட்டமாக கூறி உள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம் என்றும், அதிமுக வின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்” என்றும், குற்றம்சாட்டினார்.

“இன்று பொதுக் குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், அதிமுக பொதுக் குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்றும், அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் தேர்வு செய்ய முடியும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்றும், பொதுக் குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை” என்றும், அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “அதிமுக ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக் குழுவை அவைத் தலைவர் கூட்ட முடியாது என்றும், நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்து உள்ளது” என்றும், அவர் கூறினார். 

“அதை மீறி தான் இன்று அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர் என்றும், 23 தீர்மானங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு கூறிய நிலையில், அதையும் மீறி தீர்மானம் போடப்பட்டு உள்ளது” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

“பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டதாக சொல்லப்பட்ட கடிதம் உண்மையானது அல்ல என்றும், அது போலியாக பலர் கையெழுத்து போட்டு உள்ளனர் என்றும், அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை” என்றும், அவர் கூறினார். 

குறிப்பாக, “நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம்” என்றும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் காட்டமாக பேசினார்.

அத்துடன், “அம்மா எண்ணப்படி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், கூட்டுத்தலைமைதான் கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து” என்றும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறினார்.

முன்னதாக, அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஏற்பட்ட கடும் மோதலுக்கு மத்தியில் தான், இன்றைய தினம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. 

அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 
நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக் குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அத்துடன், “இன்றைய பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாது என்றும், ஒற்றைத் தலைமை குறித்து மட்டுமே விவாதம் நடைபெறும்” என்று, சக உறுப்பினர்களும் ஓபிஎஸ் மேடையில் இருக்கும் போதே அறிவித்தனர். இந்த முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுத்தார் என்றும் கூறப்பட்ட நிலையில், அப்போது திடீரென்று மேடைக்கு வந்து மைக் பிடித்து பேசிய வைத்திலிங்கம், “சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழுவை நிராகரிப்பதாக” எல்லோர் முன்பும் அந்த மேடையில் கோஷமிட்டார்.

வைத்திலிங்கம் ஆவேசமாக பேசி முடித்தும், அங்கிருந்து கோபமாக வெளியேறிய நிலையில், அவரைத் தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வரிசையாக அந்த பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். இதனால், அதிமுக பொதுக்குழுவில் பெரும் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.