தமிழ் திரை உலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அஞ்சான் & சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது அடுத்த வெற்றித் திரைப்படமாக இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் தி வாரியர்.

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள தி வாரியர் திரைப்படத்தில் கதாநாயகினாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி காவல்துறை அதிகாரியாக நடிக்க, இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷரா கௌடா, நதியா, பாரதிராஜா, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ள, தி வாரியர் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன்.TR பாடி வெளிவந்த புல்லட் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி சூப்பர்ஹிட்டானது.

இதனையடுத்து தி வாரியர் திரைப்படத்திலிருந்து அடுத்த வைரல் ஹிட்டடிக்க வெளியாகியுள்ளது விசில் பாடல். பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் பிரபல பாடகர்கள் ஆண்டனி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள துள்ளலான விசில் பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்தப் பாடல் இதோ…