சென்னையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் உயிரிழந்து உள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வட கிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று இரவு முதல் சென்னையில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இப்படியாக, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

இந்த நிலையில் தான், சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால், அந்த பகுதியில் மழை நீர் தேங்கி இருந்து உள்ளது.

இந்த சூழலில் தான், மழை நீர் தேங்கியிருந்த பகுதியில் அந்த தெருவில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாடுகள், மேய்ந்து வந்திருக்கின்றன.

அப்போது, திடீரென அந்த பகுதியில் சென்ற உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்துவிழுந்து தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து உள்ளது. இதனால், அங்கு மேய்ந்துகொண்டிருந்த 5 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளன. 

இதில் 3 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேடவாக்கம் குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உரைந்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, “மேடவாக்கம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின் விநியோகம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக” மின்வாரியம் கூறியுள்ளது. 

அத்துடன், “காற்றில் இரு மின் கம்பிகள் உரசி அறுந்து விழுந்திருக்கலாம்” என்றும், அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, மேடவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், மேடவாக்கம் பகுதிவாழ் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், தரைப்பாலத்தை ஆட்டோவில் கடக்க முயன்ற தந்தை மற்றும் மகன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
 
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், உடுமலையை அடுத்து இருக்கும் அணிக்கடவு வாகத்தொழுவு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் தாராபுரம் அருகில் இருக்கும் உப்பாறு அணைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இதனால், அங்கு வெள்ளநீரானது தரைப்பாலத்திற்கு மேல் சென்று கொண்டிருந்தது. 

அப்போது, அந்த வழியாக மினி ஆட்டோவில் வந்த சின்னச்சாமி மற்றும் அவரது மகன் செல்வகுமார், தரைப்பாலத்தைக் கடக்க முயற்சிக்கும் போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
 
பின்னர், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தவித்துக் கொண்டிருந்த சின்னச்சாமியை சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். ஆனால், அவரது தந்தை சின்னச்சாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

மேலும், சின்னச்சாமியை தொடர்ந்து தேடி வந்த நிலையில், அவர் இறந்த நிலையில் அவரது உடல் தற்போது மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.