இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து மெகா ஹிட்டான மங்காத்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் மஹத் ராகவேந்திரா.  தொடர்ந்து தளபதி விஜய்யின் ஜில்லா, வெங்கட்பிரபுவின் சென்னை 600028-||, சிலம்பரசனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மஹத் ராகவேந்திரா கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன்தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை, 2030 ஆகிய தமிழ் திரைப்படங்களிலும், சைக்கிள் எனும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் மஹத் ராகவேந்திரா அடுத்ததாக பாலிவுட்டில் கால் பதிக்கிறார். இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை திரைக்கதையில் உருவாகும் புதிய பாலிவுட் திரைப்படத்தில் ஜாஹிர் இக்பால் மற்றும் மஹத் ராகவேந்திரா கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது டெல்லியில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.