விமானத்தில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சக பயணி ஒருவருக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் பகவத் காரத். மருத்துவரான இவர், மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார்.  மத்திய இணை அமைச்சர் பகவத் காரத், மருத்துவ துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் மத்திய இணை அமைச்சர் பகவத் காரத் நேற்று அதிகாலை  சென்று கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதிகாலை 2 மணியளவில், 45 வயதான பயணி ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. 

m1

இதையடுத்து விமானப் பணிப்பெண் அவசர மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவர் உதவி தேவை என அறிவித்தார். இந்நிலையில், விமானப் பணிப்பெண்ணிடம் பிரச்சினையைப் பற்றி கேட்டறிந்த பகவத் காரத் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கச் சென்றார். 45 வயதான அந்த நபர் மயக்க நிலையில் இருந்தார்.

அவரை பரிசோதித்த பகவத் காரத், பாதிக்கப்பட்ட நபரின் சட்டையை கழற்றி அவரது மார்பில் மசாஜ் செய்து அவரது இதயத்திற்கு இரத்தம் பாயும் வகையில் கால்களை சற்று உயர்த்தி தலையணையில் வைத்தார். விரைவில் அந்த நபர் சுயநினைவு அடைந்தார். அதன் பின்னர், அந்தப் பயணிக்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை பிரச்சினைகள் இல்லை என பகவத் காரத் தெரிவித்ததை அடுத்து விமானத்தில் பயணம் செய்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

m5

பின்னர், மும்பை சென்றடைந்ததும், அந்த பயணிக்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளித்தனர். இதுகுறித்த  ட்விட்டர் பதிவை, இண்டிகோ நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, 'மனதளவில் அவர் எப்போதுமே மருத்துவர்தான்' என இன்டிகோ நிறுவனத்தின் ட்விட்டர் பதிவை ரீ-ட்வீட் செய்தார்.

மத்திய இணை அமைச்சரான பகவத் காரத், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பகவத் காரத் கூறுகையில், ‘அந்த பயணிக்கு தொடர் வியர்வை ஏற்பட்டதுடன், ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’ இவ்வாறு அவர் கூறினார். அமைச்சரின் இந்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

A doctor at heart, always!

Great gesture by my colleague @DrBhagwatKarad. https://t.co/VJIr5WajMH

— Narendra Modi (@narendramodi) November 16, 2021