“நான் ஒரு மீம்ஸ் பார்த்தேன்” என்று, சென்னை மழை மற்றும் தமிழக அரசியல் பற்றி சுவாமி நித்தியானந்தா பேசி வீடியோ வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வட கிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

அத்துடன், சென்னையில் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிக பட்சமாக 23 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னை உட்பட தமிழகத்தின் இன்னும் பல மாவட்டங்களிலும் கன முதல், மிக கன மழை வரை கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், வட கிழக்கு பருவமழையின் தீவிரம் இன்று முதல் நாளை வரை இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. அதன்படியே, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

முன்னதாக, கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழை வெள்ளத்தில் சிக்கி பல வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துகொண்டது. அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 4 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படி நிவாரணங்களை வழங்கினார்.

இந்த நிலையில், சென்னை வெள்ளம் குறித்து நித்தியானந்தா தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள சுவாமி நித்தியானந்தா, “சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணத்தையும் அந்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாக” குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றும், சட்டத்தாலும், நீதிமன்றத்தால் கூட இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது” என்றும், தனது வீடியோவில் சுவாமி நித்தியானந்தா பேசியிருக்கிறார்.

குறிப்பாக பேசியுள்ள சுவாமி நித்தியானந்தா, “நான் ஒரு மீம்ஸ் பார்த்தேன். சென்னையில் மழை வெள்ளம் வந்த போது, அப்போதைய முதல்வர் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு போய் பார்க்கிறார். அடுத்த ஆட்சியில் இன்னொரு முதல்வர் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு போய் பார்க்கிறார். 

அதற்கடுத்த ஆட்சியில் இன்னொரு முதல்வர் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு போய் பார்க்கிறார். இதுல இருந்து என்ன தெரிகிறது?  எத்தனை முதல்வர்கள் வந்தாலும், அந்த பிரச்சனை தீரவே இல்லை” என்று, நகைச்சுவையோடு சுட்டிக்காட்டி உள்ளார்.

முக்கியமாக, “பிரச்சனை என்னன்னா, தண்ணியோட வீட்டுல நாம வீடு கட்டுனதால, நம்ம வீட்டுல தண்ணி வீடு கட்டிடுருச்சு. அவ்வளவு தான்” என்றும், சென்னை மழை வெள்ளத்தையும், தமிழக அரசியலையும் சுவாமி நித்தியானந்தா நக்கல் அடித்துள்ளார்.

மேலும், “சென்னையை ஆரம்பத்திலேயே ஒழுங்குபடுத்து இருக்க வேண்டும். இவ்வளவு காலமும் குடி இருந்தாச்சு. இதை ஒண்ணும் பண்ண முடியாது. யாரையும் அப்புறப்படுத்த முடியாது. சட்டத்தால் கூட ஒண்ணும் பண்ண முடியாது. 

அதனால், மழை அடிக்கிற மாதிரி அடிக்கும். நாம அழுவுற மாதிரி அழுவுவோம். நிவாரணம் நடக்குற மாதிரி நடக்கும். திரும்ப அடுத்த மழை அடிக்கிறபோதும் மழை அடிக்கிற மாதிரி அடிக்கும். நாம அழுவுற மாதிரி அழுவுவோம். நிவாரணம் நடக்குற மாதிரி நடக்கும்.  அவ்வளவுதான்’” என்றும், சென்னை மக்களையும் சுவாமி நித்தியானந்தா சுட்டிக்காட்டி நக்கலடித்திருக்கிறார். 

சுவாமி நித்தியானந்தாவின் இந்த மழை அரசியல் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.