3 புதிய வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்ப பெற்றுள்ள நிலையில், “லத்தி ஒன்றே தீர்வு.. சர்வாதிகாரம்தான் சரியான முடிவு” என்று, விவசாயிகளுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரின் போது, புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதற்கு எதிராக, நாடு முழுவதும் திரண்ட விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு முதல் போராடி வருகின்றனர். 

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால், டெல்லியில் பெரும் வன்முறை எல்லாம் வெடித்தது. 

இது உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், போராட்டக் களத்தில் சுமார் 700 விவசாயிகள் வரை  உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியானது. எனினும் விவசாயிகளின் போராட்டங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தன. 

அதன் தொடர்ச்சியாகவே, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்து, நாடு எங்கும் உள்ள விவசாயிகளிடம் இன்னும் புரட்சித் தீயைப் பற்ற வைத்தது. 

இந்த நிலையில், இன்னும் 7 நாட்களில் விவசாயிகள் போராட்டம் ஒரு ஆண்டு நிறைவேற இருந்த நிலையில், “3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாகவும், அதற்காக வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றும், பிரதமர் நரேந்திர மோடி அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அத்துடன், “டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்பவும்” பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். 

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாகத் தொடர்ந்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.  

அந்த வகையில், இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் வழக்கம் போலவே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, “பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அல்லாமல் தெருக்களில் இருப்போர் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டால் அது பயங்கரவாத தேசம் தான்” என்றும், மிக கடுமையாக அவர் விமர்சித்து உள்ளார்.

முக்கியமாக, இந்திரா காந்தியின் 104 வது பிறந்த தினத்தை முன்னிட்டு குறிப்பிட்டுப் பேசிய கங்கனா, “தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, லத்தி ஒன்றே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து உள்ளார்.