ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா சாலைகளை பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்த மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதய்பூர்வதி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான  ராஜேந்திர சிங் குதா என்ற எம்.எல்.ஏ.வுக்கு பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பொறுப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, ஜுன்ஜுனு மாவட்டத்தில் தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Katrina kaif  Rajendra Gudha

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, தனது தொகுதி மக்களிடம் உரையாடுகிறார். அப்போது மக்களில் சிலர், தங்கள் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அமைச்சரிடம் முறையிடுகின்றனர்.
 
உடனே அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரைப் பார்த்து, "எனது தொகுதியில், கத்ரீனா கைஃபின் கன்னங்களைப் போல் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்" என கூறுகிறார். 

மேலும் “பாலிவுட் நடிகை ஹேமமாலினி வயதானவர். தற்போது யார் பெரிய பிரபலம் என்று மக்களிடம் கேட்டேன். அவர்கள் கத்ரீனா கைஃப் என்று சொன்னார்கள்” என்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவரும் நிலையில் அமைச்சரின் பேச்சுக்குக் பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்களும் எழுந்துள்ளன.

இதற்கு முன்பு கடந்த 2005-ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது “பீகாரின் சாலைகள், பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் கன்னங்களை போல் பளபளப்பாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் பெண்களுக்கு எதிரானவர் லாலு பிரசாத் யாதவ் என்ற கருத்துக்களை கூறி கண்டனங்கள் தெரிவித்தனர்.

Hema Malini P C Sharma

பீகார் மற்றும் ராஜஸ்தான் அமைச்சர்கள் மட்டுமின்றி இந்த மாதிரி சர்ச்சையில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசம் அமைச்சர் பி.சி. சர்மாவும், லாலு பிரசாத் யாதவ் மாதிரி சாலைகளை நடிகை ஹேமமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.

இதேபோல் அதே வருடம் சட்டீஸ்கர் மாநில அமைச்சர் கவாஸி லக்மாவும் கருத்துக்கள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் அமைச்சர், ராஜேந்திர சிங் குதா கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

#WATCH | "Roads should be made like Katrina Kaif's cheeks", said Rajasthan Minister Rajendra Singh Gudha while addressing a public gathering in Jhunjhunu district (23.11) pic.twitter.com/87JfD5cJxV

— ANI (@ANI) November 24, 2021