தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் நடிகர் யோகிபாபு அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், தல அஜீத் குமாருடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு, பன்னிக்குட்டி , காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷாம் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. யோகி பாபு உடன் இணைந்து நடிகை சுபத்ரா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு யோகிபாபு முழுக்க முழுக்க சீரியசான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. யோகி பாபு மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் இன்று ஷூட்டிங்கை கேக் வெட்டி நிறைவு செய்தனர்.