கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கணித ஆசிரியர் சரவணனும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் தற்போது போலீசாரின் கையில் கிடைத்துள்ளது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத் தான் இருக்கணும்” என, தற்கொலைக்கு முன்பு கரூர் பள்ளி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலையில் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் தூக்கிட்ட தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அப்போது, கணித ஆசிரியர் சரவணன் மீது இந்த விசாரணை திரும்பியது. இதனால், சக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தான், குற்றம் சாட்டப்பட்ட கணித ஆசிரியர் சரவணனும், தற்போது தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்.

மேலும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் தற்போது போலீசாரின் கையில் சிக்கி உள்ளது.

அந்த கடிதத்தில், “நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், என்னை ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றும், அந்த கடிதத்தில் ஆசிரியர் சரவணன் குறிப்பிட்டு இருந்தார்.

மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆசிரியர் சரவணனின் தற்கொலையும், அவரது உருக்கமான தற்கொலை கடிதமும் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.