வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக, வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக இருக்கிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும், கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்குக் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் அடுத்து வரும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக” குறிப்பிட்டு உள்ளது.

அத்துடன், “இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் மேற்கு வட மேற்கு திசையில் அடுத்து வரும் நாட்களில் நகர்ந்து தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது. 

“இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்யலாம் என்றும், இதனால் தமிழ்நாட்டிற்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை” விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், “தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்” என்றும், வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது. 

அதே போல், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்” என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனிடையே, அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று சில மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கன மழையால் மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.