“3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்” என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்து உள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரின் போது, புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய நிலையில், இந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் திரண்ட விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராடி வந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் போராட்டமானது, கிட்டதட்ட ஒரு ஆண்டை நிறைவு செய்ய இன்னும் நில நாட்களே இருந்த நிலையில்,  “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் தொடர்ந்து அறிவித்து வந்தன. 

இந்த நிலையில், பிரதமர் மோடி கடந்த வாரம் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது “கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் திரும்பப் பெறப்படுவதாக” பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். 

“இந்த 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது” என்றும், பிரதமர் மோடி அறிவித்தார்.

அத்துடன், “3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்?” என்பது குறித்தும், பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தான், “வேளாண் சட்டங்கள் வாபஸ் என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக” தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், “வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனால், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் “வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021” இடம் பெற்று இருப்பதாகவும் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதன் மூலமாக, “இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத் தொடரில், 3 புதிய வேளாண் சட்டங்களும்  ரத்து செய்யப்படும்” என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்படும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். அதன் பிறகு, முறைப்படி இந்த சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டதாக அரசாணை வெளியிடப்படும். அப்போது தான், இந்த சட்டம் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.