அடுத்து 3 ஐபிஎல் சீசன்களுக்கு எம்.எஸ் தோனியை அணியில் வைத்துக் கொள்ள முடிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒப்பந்தத்தை இறுதி செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது சென்னை ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 9 வருட தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொண்டுள்ளார் கேப்டன் தோனி.

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கேப்டன் தோனி தலைமையில் கர்ஜித்து 4 வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதித்துக்காட்டியது. 

இது தொடர்பாக, சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. 

அந்த விழாவில் பேசிய கேப்டன் மகேந்திர சிங் தோனி, “சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும், ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்றும், சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்று, மனம் திறந்து பேசினார்.

அத்துடன், “சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகமாக கற்று கொடுத்துள்ளது என்றும், மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள், அதுதான் அவர்களது சிறப்பு” என்றும், பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

குறிப்பாக, “எனது கடைசி போட்டி சென்னையில் தான் என நான் நம்புகிறேன்” என்றும், கேப்டன் மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த நிலையில் தான், அடுத்த 3 ஐபிஎல் தொடர்களுக்கும் தல தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்கும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அதாவது, ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐ விதிகளின் படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில், தோனியுடன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும் சிஎஸ்கே அணியானது தக்க வைத்துக்கொள்கிறது. 

சிஎஸ்கே அணியின் இப்போதைய ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாடும் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தக்க வைக்கப்படுவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அதே போல், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியுடன், சென்னை அணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவருடன் சாம் கரனையும் சென்னையில் அணியில் தக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், முதல் முறையாகச் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா, அணியில் மீண்டும் தக்க வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன், எல்லா ஐபிஎல் அணிகளும் வரும் 30 ஆம் தேதிக்குள் தங்களது அணிகள் தக்க வைக்கும் வீரர்கள் பற்றிய விபரங்களை அறிவிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் புதிதாக உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தை அடிப்படையாகக் கொண்டு 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.