சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சூளைமேட்டில் இருந்து காது குத்து விழா ஒன்றுக்காக ரவி என்ற நபர், தமது குடும்பத்தினர் 7 பேருடன் தனது காரில் அழைத்துக்கொண்டு, ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, காரில் சென்றுகொண்டு இருந்தபோது, அந்த காரானது சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கவரைப்பேட்டை பகுதியை அருகில் உள்ள பெருவாயல் என்னும் இடத்தில் சென்றுகொண்டிருந்தது.

அந்த நேரத்தில், அந்த காரின் முன் பகுதியில் முதலில் லேசாகப் புகை வந்திருக்கிறது. இதனால், பயந்து போன ரவி, தனது காரை உடனடியாக நிறுத்தி விட்டு “எப்படி? எங்கிருந்து புகை வருகிறது?” என்று பார்த்திருக்கிறார்.

அப்போது, காரில் பயணித்த 7 பேரும் காரை விட்டு கீழே இறங்கி இருக்கிறார்கள். 

அந்த நேரம் பார்த்து, அந்த கார் திடீரென்று தீ பற்றி எரிந்து உள்ளது. காரில் தீ பற்றிய வேகத்தில், அந்த கார் முழுவதும் தீயானது மளமளவென்று கொளுந்துவிட்டு எரிந்து, அந்த கார் முழுமைக்கும் தீ பரவி, கார் முழுமையாக எரிந்திருக்கிறது. 

இதனால், பயந்து பதறிப்போன ரவி உள்ளிட்ட 7 பேரும், காரில் பற்றிக்கொண்டு எரியும் தீயை அணைக்க போராடி உள்ளனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

அத்துடன், கார் தீ பற்றி எரியும் போது, அதில் பயணித்தவர்கள் அனைவரும் சற்று முன்பாக காரை விட்டு கீழே இறங்கியதால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. 

இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்த கார் முழுமையாகத் தீயில் எரிந்தது.

இந்த தீ விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததை, அந்த வழியாகச் சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.