“கடும் வறட்சி, கடல் மட்டம் உயர்வு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும்” என்று, பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. புதிய கால நிலை மாற்றத்தால், உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள், வறட்சி போன்ற மிகத் தீவிரமான வானிலை உருவாக்கும் என்று, கடந்த சில ஆண்டுகளாகவே நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தான், இந்தியாவிலும் கால நிலை மாற்றத்தால், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், “காலநிலை மாற்றங்கள் குறித்த அச்சம் மற்றும் அது தொடர்பாக அரசு செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகள் என்ன?” என்பது பற்றி செய்திகள் உலகம் முழுவதும் தற்போது பேசும் பொருளாக மாறி வருகிறது.

அந்த வகையில், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு” நேற்று 23 ஆம் தேதி தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த கருத்தரங்கில், ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ள பருவ நிலை ஆய்வு வல்லுநர் ஸ்வப்னா பனிக்கல், “கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை எதிரக்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம்” குறித்து, விளக்கி இருக்கிறார்.

முக்கியமாக, “இந்திய கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

“கடந்த 1870 ஆம் ஆண்டில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவில் கடல் மட்டம் 1.8 மிமீ உயர்ந்து உள்ளது என்றும், ஆனால் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரை இந்த அளவு 2 மடங்காக 3.3 மிமீ அளவிற்குக் கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது” என்பதையும், ஸ்வப்னா பனிக்கல் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக, “வரும் 2050 ஆம் ஆண்டில் மேலும் 15 - 20 சென்டி மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது என்றும், வெப்பத்தை 91 சதவீதம் அளவுக்கு கடல் உட்கிரிகிப்பதே உயர்வுக்குக் காரணம்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இதனால், இந்தியக் கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறும் அபாயம் இருப்பதாகவும்” வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

அத்துடன், “கடல் மட்டம் உயர்வால், அதிக புயல்கள் ஏற்படும் காலங்களில் கடலில் எழும்பும் அதிக உயர அலைகளும் கடல் மட்டத்தை மேலும் உயர்த்தும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் இந்தியாவை எச்சரித்து உள்ளனர்.

மேலும், “மழைக் காலங்களில் அதிக கனமழை கொட்டுவது போன்றே பருவமழை காலங்களில் மழை பொய்த்து கடும் வறட்சி நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது” என்பது வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

மிக முக்கியமாக, “தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களே அதிகம் பாதிக்கக் கூடும் என்றும், கடும் சவால்களை எதிர்கொள்ள இந்த மாநிலங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்றும், ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.