ஒமிக்ரான் கொரானா தொற்றுக்கு பயந்து குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருத்துவர் தற்போது அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா திரிபு பரவ ஆரம்பித்ததால் மக்கள் மீண்டும் அச்சத்துக்குக் ஆளாகியுள்ளனர். 

இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த ஒமிக்ரான் கொரோனா திரிபு அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒமிக்ரான் கொரோனாவுக்கு பயந்து பேராசிரியர் ஒருவர் தன் மனைவி, இரண்டு பிள்ளைகளைக் கொலைசெய்த நிலையில், தற்போது அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கான்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் தடயவியல் தலைமை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் சுஷில் சிங் (55). இவரது மனைவி சந்திர பிரபா (50), மகன் ஷிகார் சிங் ( 21), மகள் குஷி சிங் (16).

doctor kanpur murder

அழகிய குடும்பம் கொண்ட மருத்துவர் சுஷில் சிங் சமீபகாலமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காகச் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். அதோடு சமீபத்தில் பரவிவரும் ஒமிக்ரான் கொரோனா குறித்து மருத்துவர் சுஷில் சிங்கிடம் அதிகப்படியான அச்சம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி ஒமிக்ரானிலிருந்து விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கல்யாண்பூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தன் மனைவியை சுத்தியலால் தலையில் அடித்து கொலைசெய்துள்ளார் மருத்துவர் சுஷில் சிங். 

அதன்பின்னர் வீட்டில் தனது மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தன் சகோதரன் சுனிலுக்கு வாட்ஸ்அப்பில் மனைவி, பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டதாக மெசேஜ் அனுப்பிவிட்டு மருத்துவர் சுஷில் சிங் தப்பி ஓடிவிட்டார். 

சுனிலுக்கு அனுப்பப்பட்ட மெசேஜில், “கொரோனா உயிரிழப்புகளால் மிகவும் மனம் வெறுத்துவிட்டேன். ஒமிக்ரான் கொரோனா யாரையும் விட்டு வைக்காது. இப்படியே எனது குடும்பத்தை விட்டுசெல்ல விரும்பவில்லை. எனவே அது போன்ற சூழ்நிலையிலிருந்து எனது குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் விடுவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுனில் உடனே தன் சகோதரன் வீட்டுக்கு விரைந்து சென்று கதவைத் திறந்துப் பார்த்தபோது மருத்துவர் சுஷிலின் மனைவி, பிள்ளைகள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். உடனே சுனில் இது குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்திருந்தார். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். அப்போது மருத்துவர் சுஷிலின் டைரியை கைப்பற்றினர். அதில் மருத்துவர் சுஷில் மனஅழுத்தம் காரணமாகக் கொலை செய்ததாகக் குறிப்பிட்டிருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். 

மேலும் இது குறித்து கான்பூர் காவல் ஆணையர் அருண் கூறுகையில், “10 பக்கங்களுக்குக் கொலையாளி கடிதம் எழுதிவைத்திருக்கிறார். மன அழுத்தத்தில் இந்தக் காரியத்தைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தீராத வியாதினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். 

doctor kanpur murder

தப்பியோடிய சுஷிலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் சுஷில் தன் மனைவியைக் கொலை செய்ய முயன்றிருப்பதாக அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்” என்று கான்பூர் காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார்.

குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய மருத்துவர் சுஷில், தனது செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மருத்துவர் சுஷிலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சுஷில் சிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சித்நாத் ஹட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பார்த்துள்ளார்.

இதையடுத்து அழுகியநிலையில் கிடந்த சடலம் குறித்து போலீசாருக்கு அந்த இளைஞர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கபட்ட நபர், குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருத்துவர் சுஷில் சிங் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் கைப்பற்றப்பட்ட உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், சுஷில் சிங்கின் ஆதார் அட்டை, செல்போன், டிரைவிங் லைசன்ஸ் உள்பட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கொரோனாவுக்கு பயந்து உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவர் குடும்பத்தினரையே கொன்று, தற்போது சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.