“விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொள்ளப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனாலும் இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் பதவி நீக்காமல், செய்யாமல் இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக, நாட்டின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தான், “மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் படி, இன்று காலை 10 மணி தொடங்கிய விவசாயிகளின் நாடு தழுவிய இந்தப் போராட்டம், மாலை 4 மணி வரை நடைபெறும் என்று, விவசாயிகளின் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு, “லகிம்பூர் கேரி வன்முறைக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து உள்ளதாகவும்,  மத்திய அமைச்சராக அஜய் மிஸ்ரா பதவியில் இருக்கும் வரை, லகிம்பூர் கேரி வன்முறையில் நீதி கிடைக்கப்போவது இல்லை” என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளதையும்” வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

இதனிடையே, விவசாயிகள் அதிகமாக கூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, லக்னோவில் விவசாய சங்க தலைவர், நிர்வாகிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்க போலீசார் மிக அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதுடன், வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் சூடுபிடித்து உள்ளது.