கையில் குழந்தை வைத்திருந்த நபர் மீது போலீசார் லத்தியால் கண்மூடித்தனமாக வெறித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“போலீஸ் உங்கள் நண்பன்” என்ற வாசகம், சமீப காலமாக பொய்யாகிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேகத் மாவட்டத்தில் இருக்கும் அக்பர்பூர் எனும் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் சிலர் பிரச்னையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இந்த புகாரையடுத்து, அங்கு வந்த அங்குள்ள காவல் நிலைய போலீசார் சிலர், அந்த மருத்துவமனையின் முன்பிருந்தவர்கள் மீது லத்திகளால் கடுமையாக தாக்கி உள்ளனர். 

அப்போது, அந்த மருத்துவனையின் முன்பு தனது கையில் குழந்தையுடன் இருந்த நபர் மீதும், போலீசார் கண்மூடித்தனமாக வெறித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். 

குறிப்பாக, கையில் குழந்தையை வைத்திருந்த நபர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் லத்தியால் கண்மூடித்தனமாக அடித்து தாக்குவதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளார். 

அந்த வீடியோவில், தன்னை அடிக்கும் போலீசாரிடம் “குழந்தைக்கு காயம் ஏற்பட்டுவிடப்போகிறது” என்று, அந்த நபர் தொடர்ந்து  கூறிகிறார். ஆனால், இதனை சற்றும் பொருட்படுத்தாத அந்த போலீஸ்காரர், கையில் குழந்தையை வைத்திருக்கும் நபரை தொடர்ந்து தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார். 

இதனால், குழந்தை மீது அடி விழுந்து விடும் என்று பயந்த அந்த நபர், வேறு வழியில்லாமல் அங்கிருந்து தனது குழந்தையுடன் ஓடத் தொடங்கினார். 

ஆனால், அப்போது மனம் இறங்காத அந்த போலீஸ்காரர், அவரை விரட்டிச் சென்று அந்த நபர் கையில் வைத்திருக்கும் குழந்தையை அவரிடம் இருந்து பறிக்க முயற்சித்து அந்த நபருடன் மல்லுக்கட்டுகிறார்.

இதனையடுத்து, “இது தாயில்லாத குழந்தை” என்று, கெஞ்சி தன்னை விட்டு விடுமாறு அந்த நபர் போலீசாரை பார்த்து மன்றாடுகிறார்.

இதனையடுத்து, அந்த நபரை அந்த போலீசார் விட்டுவிட்டு செல்கின்றனர். ஆனால், நெஞ்சை பதைபதைக்க செய்யும் இந்த கொடூரமைான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி, அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த வீடியோ குறிதது விளக்கம் அளித்த அந்த பகுதியின் போலீஸ் டி.எஸ்.பி அருண் குமார் சிங், “அந்த மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு வளாகத்தை மூடி பிரச்னையில் ஈடுபடுவதாக மருத்துவமனையில் இருந்து புகார் வந்ததால், போலீசார் அங்கு சென்றனர்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “கையில் குழந்தையை வைத்திருந்த நபர், அந்த மருத்துவமனையின் ஊழியர் தான் என்றும், ஆனால் அவரும் அவரின் சகோதரரும் அவ்வப்போது தொந்தரவு செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன” என்றும், கூறினார்.

“இதனால், சிறிதளவு அவர் மீது கடுமை காட்ட நேர்ந்தது என்றும், உண்மையில் குழந்தைக்கு அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே குழந்தையை அவரிடம் இருந்து கைப்பற்ற முயற்சித்தோம்” என்றும், அந்த அதிகாரி விளக்கம் அளித்தார்.

ஆனால், போலீசாரின் இந்த விளக்கம் அந்த மாநில மக்களிடம் இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியல், ஒட்டுமொத்த போலீசாருக்கு எதிராகவும் பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இச்சம்பவம் குறித்து விசாரித்து தவறு செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தெரிவித்துள்ளனர். என்றாலும், இந்த சம்பவம், போலீசாருக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.