2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Parliament Attack

இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் 20ம் ‍ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி காலை 11.30 மணியளவில் 5 பயங்கரவாதிகள் திடீரென காருடன் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். அப்போது பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதில் 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதனையடுத்து  துணைக் குடியரசுத்தலைவரின் பாதுகாவலர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் நாடாளுமன்றம் முழுவதும் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்தது. இருந்தாலும் எட்டு பாதுகாப்புப்படையினர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ஜனநாயகம் என்று கருதப்படும் நாடாளுமன்ற மீது தாக்குதல் நடத்தியது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.

அப்பொழுது அந்த நேரத்தில் மாநிலங்களவையும், மக்களவையும், 40 நிமிட நேரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியிருந்தனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் வளாகத்தில் நின்றிருந்த எம்.பி.க்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

2001, டிசம்பர் 15 - அப்சல் குரு, பேராசிரியர் ஹூலானி, அப்சன், செளகத் ஹூசைன் ஆகியோர் கைது. தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதால் அந்நாட்டு அரசிடம் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியது. 2001,டிசம்பர் 25- ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அஷாரை கைது செய்தது பாகிஸ்தான்.

2004 ஆகஸ்ட் 4 அப்சல் குருவின் தூக்குத் தண்டனை உறுதியானது. செளகத்தின் தண்டனை குறைக்கப்பட்டது.  2006 செப்டம்பர் 26-ல் அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு. 2006 அக்டோபர் 3-ல்  அப்சல் குருவின் மனைவி குடியரசுத்தலைவருக்கு கருணை மனு. 2007 ஜனவரி 12-ல் மறுபரீசிலனை செய்யக்கோரிய அப்சல் குருவின் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிப்பு. 2013 பிப்ரவரி 3-ல் கருணை மனுவை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து 2013 பிப்ரவரி 9 காலை 8 மணிக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். 

இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு, இன்று பாராளுமன்றத்தில் வீரமரணம் அடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்தூவி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜ்நாத் சிங்  அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து  நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.  வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.