பட்டியலின பிரிவைச் சேர்ந்த இருவரை பொது மக்கள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கிய ஆதிக்க சாதியினர்,  சாலையில் எச்சிலை துப்பி, அதை இருவரையும் நக்க வைத்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியா சாதி வெறியால் ஊறிப்போய் இருக்கிறது என்பதற்கு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவமே ஒரு சாட்சியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் “ஜெய்பீம்” விவகாரமும் ஒரு சாட்சியாக திகழ்கிறது.

அதாவது, பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து ஒன்றில் சமீபத்தில் தேர்தல் ஒன்று நடைபெற்றது.

அப்போது, பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பல்வந்த் சிங் என்பவர், அந்த பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் தனக்கு வாக்களிக்காதது தான், தனது தோல்விக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி, அவர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியலின பிரிவைச் சேர்ந்த 2 பேரை கடுமையாகத் தாக்கி, பொது மக்கள் முன்னிலையில் ரோட்டின் நடுவே அவர்களைத் தாக்கிய நிலையில், சாலையில் எச்சிலை துப்பி, அதை அவர்கள் இருவரையும் நக்க வைத்து கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார் பல்வந்த் சிங்.

அத்துடன், அவர்களது காதுகளைப் பிடித்துக் கொண்டு இருவரும் உட்கார்ந்து எழும் படி, அவர்களை மிரட்டி அவற்றையும் பல்வந்த் சிங், செயல்படுத்தி காட்டியிருக்கிறார்.

அதாவது, ஓட்டு போட பணம் கொடுத்தும், இவர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும், அவர்களைத் தாக்கிய பல்வந்த் சிங் தாக்கிய அந்த பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த கொடுமைகளை எல்லாம் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோ அந்த மாநிலத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட பல்வந்த் சிங்கை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அந்த மாவட்ட எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஸ்ரா கூறியுள்ளார். 

இதனிடையே, பட்டியலினத்தைச் சேர்ந்த இருவரைக் கடுமையாகத் தாக்கி, சாலையில் எச்சிலைத் துப்பி, அதனை இருவரையும் நக்க வைத்து உள்ள ஆதிக்க சாதியினரின் கொடூரச் செயல், இந்தியா முழுவதும் பரவி, கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.