கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை எடுத்து விட்டு தலைமறைவான 10 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் முதல்முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த இருவரில் ஒருவர் தென்னப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இன்னொருவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆவார். ஒமிக்ரான் பாதித்த தென்னாப்பிரிக்க பயணி பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே, தனியார் பரிசோதனை மையத்தில் நெகட்டிவ் சான்றிதழ் பெற்று துபாய் சென்றுவிட்டார்.

இரண்டாவதாக ஒமிக்ரான் கண்டறியப்பட்டவர் கர்நாடாக மாநிலத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவர் சமீபத்தில் வெளிநாடு எதற்கும் சென்றுவராத நிலையில், அவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக குஜராத் வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

OMICRON INDIA UNTRACEABLE

இதையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய  மரபணு வரிசை பரிசோதனைக்கு அவரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 

இதற்கிடையே நவம்பர் 12 முதல் 22 ஆம் தேதி வரைக்குமான காலகட்டத்தில் கர்நாடகாவிற்கு வந்த தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 10 பேர் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

இந்தச் சூழலில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர், “மொபைல் ஃபோன்களை அணைத்து வைத்துவிட்டு யாரும் காணாமல் போகக் கூடாது. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என வெளிநாட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் அசோக், “விமான நிலையத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு நெகட்டிவ் என முடிவுகள் வரும் வரை விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார். 

மேலும் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தப்பிய 10 பேர் தங்களுடைய செல்போனை ஆஃப் செய்துள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கர்நாடக மாநில அமைச்சர் அசோக் கூறினார்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டுக்கு வந்த 297 வெளிநாட்டவர்களில், 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் போலியான முகவரியையும், மொபைல் எண்ணையும் மீரட் நிர்வாகத்திடம் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து உள்ளூர் புலனாய்வு பிரிவு மாயமானவர்களைத் தேடிவருகிறது. 

இந்நிலையில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் தரையிறங்கிய 60 வெளிநாட்டினர் (ஆப்பிரிக்காவை சேர்ந்த 9 பேர் உட்பட), கடந்த 10 நாட்களில் விசாகப்பட்டினம் வந்துள்ளனர். இதில் 30 பேர் விசாகப்பட்டினத்தில் தங்கியுள்ளனர். எஞ்சிய 30 பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டனர்.

OMICRON INDIA UNTRACEABLE

இவர்களுக்கு விமான நிலையங்களில் ஏற்கனவே ஆர்.டிபி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கும். இருப்பினும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

ஆனால் பலர் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் 30 பேரும் மாயமாகி விட்டனரா என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பரிசோதனை செய்து ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் பிரச்சினை கிடையாது. இல்லையெனில் விபரீதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அஞ்சப்படுகிறது. 

இந்த சூழலில் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளது. கடந்த 10 நாட்களில் விசாகப்பட்டினத்தில் இருந்து வெளியேறி வேறு மாவட்டங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய வேண்டும். 

அவர்களின் இருப்பிடங்களை கண்டறிய உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசாகப்பட்டினம் இணை ஆட்சியர் அருண் பாபு கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து விசாகப்பட்டினம் திரும்பியவர்களில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.