தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தா அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தில் இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தயாராகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வருகிற டிசம்பர் 17ஆம் தேதி வெளிவரவுள்ள புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் சமந்தா.

இதனிடையே நடிகை சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள AIG தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவ தொடங்கின. இந்நிலையில் நடிகை சமந்தாவின் மேலாளர் மகேந்திர பாபு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தாவின் உடல்நிலை குறித்த உண்மையை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “சமந்தா நலமாக இருக்கிறார்… இருமல் தொந்தரவு காரணமாக  AIG மருத்துவமனையில் சில பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்… தயவுசெய்து சமூக வலைதளங்களில் பரவும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.