சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உலகின் கால நிலை மாற்றம் மிகவும் மோசமடைந்து வருகிறது.

முக்கியமாக, இந்தியாவைப் பொறுத்தவரையில் டெல்லியில் போக்குவரத்து காற்று மாசு ஒரு பக்கம் பெரிய அளவில் இருந்தாலும், இன்னொரு பக்கம் டெல்லியில் மிக அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

இதன் காரணமாக, டெல்லியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் காற்று மாசு உள்ளிட்டவற்றைக் குறைக்கும் வகையில், அந்த மாநில வாகன ஓட்டிகளுக்கு அந்த மாநில அரசு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதன்படி, டெல்லி அரசு ஒன்றன் பின் ஒன்றாகத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் இப்படி முன்னோடியாக இருக்கும் இந்த திட்டத்தில் அரசு பணியாளர்களும் அவற்றை ஒவ்வொன்றாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதே போல், “போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வியட்னாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் வருகிற 2025 ஆம் ஆண்டுக்கு பின் முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்குத் தடை விதிக்க அங்கு முக்கிய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்” செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதாவது, ஹனோய் நகரில் 56 லட்சம் மோட்டார் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், அங்கு மிகவும் குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தனி நபர்கள் வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பதால், இந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அந்த நகரமே ஸ்தம்பித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே போன்று தான், தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் மிக பெரிய அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

அதன்படி, சென்னையில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி தற்போது புதிதாகத் திட்டமிட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, “335 கோடி ரூபாய் செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. 

இந்த திட்டத்தின் படி, சென்னை வியாசர்பாடி கணேசபுரம், ஓட்டேரி, தி.நகர் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் கணேசபுரத்தில் 142 கோடி ரூபாய் செலவில் 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்துக்கு அங்கு 4 வழி சாலைகள் கொண்ட மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளதாகவும்” திட்டமிடப்பட்டு உள்ளது.

அதே போல், “சென்னை ஓட்டேரியில் 62 கோடி ரூபாய் செலவில் 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலைகள் கொண்ட மேம்பாலமும், தி.நகர் உஸ்மான் சாலையில் 1,200 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலைகள் கொண்ட மேம்பாலமும் அமைக்கப்பட இருக்கின்றன. 

முக்கியமாக, “இந்த மேம்பாலத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இது எந்த அளவிற்குப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்பது மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகே தெரிய வரும்” என்றும், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.