தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஓ மணப்பெண்ணே. நடிகை பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

Third Eye என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த புதிய திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.