காதலுக்கு இனி மதம் தடையில்லை என்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. 

குஜராத் மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான வழக்கு ஒன்று வந்துள்ளது.

அந்த வழக்கில், “என்னுடைய மகளை இளைஞர் ஒருவர், கட்டாய திருமணம் செய்துகொண்டதாக” பெண்ணின் தந்தை பகிரங்கமாக குற்றச்சாட்டிருந்தார்.

மேலும், “மாற்று மதத்தவரை திருமணம் செய்த ஆணுக்கு எதிராக, எனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும்” பெண்ணின் தந்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், திருமணம் செய்துகொண்ட ஆணுக்கு எதிராக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 

அத்துடன், முன்னதாக, குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்திய பிறகு, பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக பெற்றோருடனும் அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

அப்போது, இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், “தங்களின் விருப்பப்படி பெண்கள் வாழலாம்” என்று, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், “பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தது தவறு” என்றும், நீதிமன்றம் கூறியது. 

குறிப்பாக, “காதலுக்கு மதம் ஒருபோதும் தடையில்லை” என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்தது. 

அதனைத் தொடர்ந்து, பங்கஜ் நக்வி, விவேக் அகர்வால் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குறிப்பிட்ட இளைஞனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து, இந்த காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும் காவல் துறையினருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், வேலூர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை வாயை பொத்தி தனது வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு, அந்த சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமி சத்தம் போட்டு அழுது அடம் பிடிக்கவே, அந்த சிறுமியை அந்த நபர் விட்டுவிட்டார்.

அதன் பிறகு வீடு திரும்பிய அந்த சிறுமி, தனது தாயாரிடம் எல்லாவற்றையும் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு அங்குள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.