விவாகரத்தான பெண்ணை இளைஞன் ஒருவன் காதலித்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு அந்த பெண்ணின் 10 வயது மகன் தடையாக இருந்ததால், ஆத்திரமடைந்த காதலன் அந்த 10 வயது சிறுவனை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள பாட்டி சுரங்கத்தில் 22 வயதான பிட்டு என்ற இளைஞர், வசித்து வருகிறார். 

அந்த இளைஞரின் வீட்டின் அருகே ஒரு விவாகரத்தான இளம் பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் வசித்து வந்தார்.

அந்த பெண்ணுடன், இளைஞன் பிட்டு அறிமுகம் ஏற்பட்டு, அந்த அறிமுகம் நாளைவில் காதலாக மாறி உள்ளது.

அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்த பிறகு தான், அந்த பெண்ணிற்குக் கல்யாணமாகி 10 வயது மகன் இருக்கிறார் என்றும், தனது கணவனை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்பதும் அந்த இளைஞனுக்குத் தெரிய வந்தது. 

இந்த நிலையில், தனது கணவனை பிரிந்து மகனுடன் தனியாக வாழும் அந்த இளம் பெண்ணை, இளைஞன் பிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, தன்னுடைய திருமண ஆசையை அந்த பெண்ணிடம் அந்த இளைஞன் தெரிவித்துள்ளான். ஆனால், அதற்குப் பதில் அளித்த அந்த பெண், “எனக்கு 10 வயதில் மகன் இருக்கிறான் என்றும், அதனால் உன்னை என்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது” என்றும், கூறிவிட்டதாகத் தெரிகிறது. 

இதனால், கடும் ஆத்திரமடைந்த இளைஞன் பிட்டு, தனது திருமணத்திற்குத் தடையாக இருக்கும் அந்த 10 வயது சிறுவனின் மீது முழு கோபமும் திரும்பி உள்ளது. அந்த சிறுவனைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், “மகன் இருப்பதால் தானே, என்னை உன் அம்மா திருமணம் செய்ய மறுக்கிறாள். பேசாமல் உன்னை கொலை செய்துவிட்டாள்.. எங்கள் திருமணம் நடக்குமே” என்று, தப்பாக யோசித்த இளைஞன் பிட்டு, அது தொடர்பாக திட்டம் போட்டுள்ளான்.

திட்டத்தின் படியே, கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி, அந்த 10 வயதான சிறுவனை தன்னோடு ஐஸ் க்ரீம் சாப்பிட வருமாறு, பிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அந்த சிறுவனும், தனது பக்கத்து வீட்டு அண்ணன் தானே அழைக்கிறார் என்று, நம்பி சென்றிருக்கிறான். அதன் பிறகு, அந்த சிறுவனை இளைஞன் பிட்டு, அருகில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார். 

மேலும், அந்த சிறுவனின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளான். அதன் பிறகு, அங்குள்ள குளத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த சிறுவனின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்துத் தூக்கி வீசி விட்டு, வீடு திரும்பி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுவனின் தாயார் மகனை காணாமல், பல இடங்களில் தேடிப் பார்த்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இளைஞன் பிட்டு தான், அந்த 10 வயது சிறுவனை திட்டம் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பிட்டு மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், தான் சிறுவனின் தாயாரை திருமணம் செய்ய ஆசை இருந்த விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, அந்த இளைஞன் பிட்டுவை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.