“நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்குத் திரும்பி வரும்” என்று, சந்திரபாபு நாயுடு கதறி அழுதது குறித்து, நடிகை ரோஜா கருத்து கூறியுள்ளது ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மழைக் காலம் என்பதால், இங்கு அரசியல் அனல் சற்றே தளர்ந்திருக்கிறது. இதனால், ஆந்திரா அரசியலில் தற்போது அனல் பறந்துகொண்டிருக்கிறது.

ஆந்திரா “சட்டமன்றத்தில் என்னையும், எனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாகக் கூறி, இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்தில் நான் அடி எடுத்து வைப்பேன்” என்று, சபதம் செய்துவிட்டு சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தை விட்டு நேற்று வெளியேறினார். இது, ஆந்திரா அரசியலில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “சட்டமன்ற கூட்டத்தொடரில் என் மனைவி, எனது குடும்பம் குறித்து ஆளும் கட்சியினர் அசிங்கமாகப் பேசிவிட்டதாக” குற்றம்சாட்டி, செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கண் கலங்கி அழுதார்.

நேற்றைய தினம் ஆண்கள் தினம் என்பதால், சந்திரபாபு நாயுடு கண் கலங்கி அழுததும் இந்திய அரசியலில் பேசும் பொருளாக மாறிப்போனது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திராவின் நகரி தொகுதியான எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா, “பெண் பாவம் பொல்லாதது” என்று, எடுத்ததுமே சூடு பறக்க பேசினார்.

தொடர்ந்து பேசிய ரோஜா, “சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டுக் காலம் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் தடை போட்டனர் என்றும், என்னைப் பெண் என்றும் பாராமல் என்னைத் தொடர்ச்சியாக அவதூறும் கேலியும் செய்தனர்” என்பதையும், சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் நான் வெயிலில் காத்திருந்தேன், அப்போது நானும் கண்ணீர் வடித்தேன்” என்றும், சந்திரபாபு நாயுடுவால் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இதற்கெல்லாம் ஒரு நாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என்று நான் அப்போதே நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. இன்னும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது” என்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.

“அதன் பிறகும் கூட அவர் வெற்றி பெறுவதும், முதலமைச்சராவதும் என்பதெல்லாம் கனவிலும் கூட நடக்காது என்றும், அதற்குக் காரணம் கடவுள் அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்றும், தனது பழைய பகையை நினைவுகூர்ந்தார்.

முக்கியமாக, “சந்திரபாபு விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாகக் கணக்கு பார்த்துத் தீர்த்து விடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்கச் செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள். 

இதனால் தான் சொல்வார்கள் “நாம் என்ன செய்கிறோமோ, அது தான் நமக்கும் திரும்பவும் வந்து சேரும்” என்ற பழமொழியையும், அவர் சுட்டிக்காட்டினார்.

மிக முக்கியமாக, “உங்கள் மனைவி குறித்துப் பேசிவிட்டார்கள் என கண் கலங்கும் நீங்கள் தான், அதிகாரத்தில் இருந்தபோது என்னை 'ரோஜா, ப்ளூ பிலிமில் நடிக்கிறார்' என்று சொன்னீர்கள் என்பதையும், அவர் நினைவுபடுத்தினார். 

“எங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா?” என்றும், சந்திரபாபு நாயுடுவுக்குச் சரமாரியான கேள்விகளால் அவரை தும்சம் செய்தார்.

“நீங்கள் அதிகாரத்தில் இருந்த போது அனைவரையும் நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி என நீங்கள் மிக கடுமையாக விமர்சித்துப் பேசியதை யாரும் மறந்து விடவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார். 

மேலும், “நீங்கள் வடிக்கும் இந்த போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள் என்றும், எனக்குத் தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்குத் திரும்ப வாய்ப்பில்லை” என்றும், நடிகை ரோஜா அனல் பறக்கப் பேசினார். இதனால், ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.