தனியாக வசிக்க விரும்பிய பெண் ஒருவர், வாடகைக்கு வீடு தேடியபோது, அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு வீட்டின் உரிமையாளர் அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஐடி தனியார் நிறுவனத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர், பணியாற்றி வருகிறார்.

இந்த இளம் பெண், தனியாக குடியிருக்க ஆசைப்பட்டு அந்த பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றைத் தேடி வந்திருக்கிறார்.

பல இடங்களில் தேடியும் சரியான வீடு அமையாத நிலையில், சற்று மாற்றி யோசித்த அந்த இளம் பெண், “எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும்” என்று, தனது ஃபேஸ்புக்கில் உள்ள ரியல் எஸ்டேட் பகுதியில் ஒரு விளம்பரம் கொடுத்தார். 

இதனையடுத்து, அந்த விளம்பரத்தைப் பார்த்து மும்பையைச் சேர்ந்த அக்ஷய் சிங் என்பவர், அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணிடம் “இரண்டு பேர் இருக்கும் வகையிலான ஷேரிங் சிஸ்டத்தில் வேண்டுமா? அல்லது தனி அபார்ட்மெண்ட் வேண்டுமா?” என்று, கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த பெண் “எனக்கு தனி வீடு தான் வேண்டும்” என்று கூறவே, அதன் தொடர்ச்சியாக அந்த நபர்,அந்த பெண்ணிடம் “என்னிடம் ஒரு வீடு உள்ளது என்றும், ஆனால் அந்த வீட்டிற்கு நீ குடி வந்தால் வாடகை எதுவும் தர வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக நீ என்னுடன் பாலியல் உறவுக்கு வந்தால் போதும்” என்று, கூறியதாகவும் தெரிகிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடும் கோபமடைந்து அந்த நபரை மிக கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

மேலும், போனையும் அப்போது அவர் துண்டித்து உள்ளார். அதன் பிறகு, அந்த நபர் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்து தொடர்ந்து டார்ச்சர் செய்திருக்கிறார். 

அப்போதெல்லாம், அந்த பெண்ணை அந்த நபர் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், சம்மந்தப்பட்ட அக்ஷய் சிங் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்போது, அந்த நபருடன் நடந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டையும், போலீசாரிடம் அவர் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.