அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தது, உலக முழுவதும் வைரலாகி வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இருந்து வருகிறார். அத்துடன், அமெரிக்காவின் துணை அதிபராக அதே கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் இருக்கிறார். 

அதுவும், தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் தான், கமலா ஹாரிஸின் பூர்விகமான ஊராகும்.

இந்த சூழலில் தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 

அப்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குச் சற்று முன்பாக, அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் ஜோ பைடன், துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் வழங்கியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையின் படி, நேற்று காலை 10.10 மணிக்கு கமலா ஹாரிஸிடம் அதிபருக்கான அதிகாரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன் பிறகு, மிகச் சரியாக காலை 11.35 மணிக்கு அதிபர் ஜோ பைடன் முழுமையாகச் சிகிச்சை முடிந்து திரும்பியதும், தனது பொறுப்புகளை மீண்டும் பழைய படியே ஏற்றுக்கொண்டார். 

மருத்துவ பரிசோதனையின் போது, ஜோ பைடனுக்கு மயக்க மருந்து செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நேரத்தில், அவரது பணிகளைத் துணை அதிபர் கமலா ஹாரீஸ் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பான தகவலை வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு உறுதி செய்திருக்கிறது.

இதன் மூலமாக, அமெரிக்காவின் தற்காலிக அதிபர் பதவியை எற்றுகொண்ட முதல் பெண் என்கிற வரலாற்றுச் சிறப்பையும் தமிழச்சியான கமலா ஹாரிஸ் பெற்றார்.

முக்கியமாக, அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது போன்ற தற்காலிக அதிபர் பொறுப்பேற்பு நிகழ்வு மிகவும் அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. 

அதன்படி, கடந்த 1985 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் மருத்துவச் சிகிச்சைக்கு சென்ற போது, ஜார்ஜ் ஹெச்.டபியூ புஷ் அப்போதைக்குத் தற்காலிக அதிபராகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

அதே போல், கடந்த 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில், டிக் செனி தற்காலிக அதிபராகப் பதவி வகித்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்தார் என்றாலும், அவர் அதிபருக்கான இருக்கையில் அமரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.