சிறந்த நடிகரும் சிறந்த தயாரிப்பாளருமான சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து அழுத்தமான சிறந்த கலைப் படைப்பாக வெளிவந்து பலரது பாராட்டுகளையும் பெற்றது. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைகிறார் சூர்யா. கலைப்புலி.S,தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

திரையுலகில் மட்டுமல்லாமல் பொது வாழ்விலும் சமூக அக்கறை கொண்ட சிறந்த மனிதனாகவே வலம் வருகிறார் சூர்யா. தனது அகரம் அறக்கட்டளை மூலமாக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் கல்விக்கு தொடர்ந்து உதவி வரும் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட்தேர்வு குறித்தும் தனது நியாயமான நேர்மையான கருத்துக்களை முன்வைக்க தவறியதே இல்லை.

அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்திவந்த போராட்டத்தின் விளைவாக தற்போது பிரதமர் அவர்கள் 3 புதிய சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 

உழவே தலை
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…

#FarmLawsRepealed #FarmLaws 

என தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் அந்த பதிவு இதோ...