கனமழை காரணமாக திருப்பதி கோவிலில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோவில் தற்பொழுது அடைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலும் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி வருகிறது. இதனால் திருப்பதியில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. 

இந்நிலையில் சேஷாசல வனப்பகுதியில் உள்ள கபில தீர்த்தம் அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திருப்பதி மலைப்பாதை மற்றும் நடைபாதையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப் பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் உருவாகின. மலைப்பாதையில் 13 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

t1

கனமழையால், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் திருமலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மலைப்பாதையில் விழுந்த பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. 2 நாட்களாக நடைப்பாதை மூடப்பட்டிருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது மழை வெள்ளம் அதிக அளவில் கரைபுரண்டு செல்வதால் மேலும் 3 நாட்களுக்கு நடைப்பாதை மூடப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான சார்பில் கூறப்பட்டுள்ளது.

t2

திருமலையில் உள்ள ஆர்ஜிதம் அலுவலகத்திலும் வெள்ள நீர் புகுந்ததில் 'சர்வர்'கள் முடங்கின. மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை மலைப் பாதைகள் மூடியே இருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் திருமலை வெங்கடாஜலபதி கோயிலிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக 20 கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

‘பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் என்று வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்’என  சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் நெல்லூர், கடப்பா மாவட்டங்களிலும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சித்தூர்-கடப்பா சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இளைஞர் ஒருவர் மழை வெள்ளத்தில் சிக்கி சாலையோரம் உள்ள தடுப்பை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

t3

அந்த இளைஞர் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்றாரா? அல்லது அவரது கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் கல்யாணி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சொர்ணமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதிகனமழையை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெரிய அளவுக்கு மழை இல்லாமல், குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாமல் கரையை கடந்துவிட்டது. 

எனினும், வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாலும், ஈரமான வடகிழக்கு காற்று தமிழக கடற்கரையோரம் நிலவுவதாலும், அதிக அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக ஆந்திரா மற்றும் புதுவையில் மட்டும் அதிக மழை பெய்துள்ளது என்றாலும் ஆந்திர மாநிலத்தில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.