கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை, அதே கத்தியால் குத்தி கொன்ற இளம் பெண்ணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் 25 வயதான அஜித், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணான 19 வயதான இளம் பெண் கௌதமி மீது ஆசைப்பட்டு உள்ளார். இந்த ஆசை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அது ஒரு கட்டத்திற்கு மேல் சபலமாக மாறி உள்ளது. இதனால், அந்த பெண்ணை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று, அவர் எண்ணியதாகத் தெரிகிறது.

அதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், கௌதமி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்த பெண் மட்டும் தனிமையில் இருந்து உள்ளார்.
 
இந்த விசயத்தை தெரிந்துகொண்ட அஜித், நள்ளிரவு நேரத்தில், உறவினர் பெண்ணான கௌதமி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 

அப்போது, அஜித் தனது உறவினர் என்பதால், அவரை முதலில் எச்சரித்து வெளியே போகும் படி அந்த இளம் பெண் சத்தம் போட்டு கத்தி உள்ளார். ஆனால், சுத்தமாக பயம் இல்லாத இளைஞர் அஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, கௌதமியிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கௌதமி, சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டு உள்ளார். ஆனால், அது இரவு நேரம் என்பதால் அக்கம் பக்கத்தில் யாரும் உதவிக்கு விரவில்லை. 

மேலும், கௌதமியிடம் அஜித் எல்லை மீறி அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் மிக கடுமையாக ஈடுபட்டுள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த இளம் பெண், அஜித்திடம் இருந்த தன்னை தற்காத்துக் கொள்வதற்காக, அவனிடமிருந்து கத்தியைப் பிடுங்கி அவரை சரமாரியாகக் குத்தி உள்ளார். இதில், அஜித்திற்கு அதிக அளவிலான ரத்தம் வந்துள்ளது. இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, காலையில் விடிந்ததும் அங்குள்ள சோழவரம் காவல் நிலையத்திற்குச் சென்ற இளம் பெண் கௌதமி, தனக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் பலாத்கார முயற்சி சம்பவத்தைக் கூறி, அந்த இளைஞனை கத்தியால் குத்தியது குறித்தும், அதில் அவன் உயிரிழந்ததையும் கூறி சரண் அடைந்து உள்ளார். 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண் உடன் அவரது வீட்டிற்குச் சென்று, உயிரிழந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர், சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், “இளைஞன் அஜித் எதற்காக கொலை செய்யப்பட்டார்? பாலியல் பலாத்கார முயற்சியின் போது நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?” என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சோழவரம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அந்த இளம் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலியல் பலாத்கார முயற்சியின் போது நடந்த கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். அப்போது, இளம் பெண்ணிடம் நீதிபதி விசாரித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “கத்தியை காட்டி மிரட்டி பாலியல் கொடுமை செய்ய முயன்றவரை அதே கத்தியால் குத்திக் கொன்ற இளம் பெண்ணை IPC 106-ன் படி, தற்காப்புக்காகச் செய்த கொலை என்ற அடிப்படையில் அவரை கைது செய்யும் நடவடிக்கை கை விடப்பட்டு விடுதலை செய்வதாக” நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து, அந்த இளம் பெண் விடுதலை செய்யப்பட்டார்.