குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி கள்ளக் காதல் செய்த அக்காவை, சொந்த தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 19 வது பிளாக்கைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 29 வயதான சுப்புலட்சுமி, வீட்டில் இருந்து வருகிறார். இந்த சுப்புலட்சுமிக்கு பிரதாப் என்ற தம்பி ஒருவர் இருக்கிறார்.

விஜயகுமார் - சுப்புலட்சுமியின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், சுப்புலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமனின் அறிமுகம் கிடைத்து உள்ளது. ஒரு கட்டத்தில் சுப்புலட்சுமிக்கும், ஜானகிராமனுக்கும் கள்ளக் காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த கள்ளக் காதல் உல்லாச வாழ்க்கை பல நாள்களாக அவர்களுக்குள் இருந்து வந்துள்ளது. 

அத்துடன், கணவன் விஜயகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், சுப்புலட்சுமியின் வீட்டிற்கு ஜானகிராமன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் மூலமாக கணவர் விஜயகுமாருக்கும், சகோதரர் பிரதாப்புக்கும் இந்த கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரும், சுப்புலட்சுமியை கடுமையாக எச்சரித்துள்ளனர். ஆனாலும், இதனை பொருட்படுத்தாத அந்த பெண், தனது கணவன் மற்றும் தனது தம்பிக்குத் தெரியாமல், ஜானகிராமன் உடன் சுப்புலட்சுமி கள்ளக் காதல் உறவைத் தொடர்ந்து வந்து உள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று இரவு திருவொற்றியூர் குப்பத்தில் தனது வீட்டிலிருந்து, எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் அக்கா சுப்புலட்சுமியைப் பார்க்க தம்பி பிரதாப் சென்று உள்ளார். அப்போது, அக்கா சுப்புலட்சுமியின் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. அப்போது, பிரதாப் வீட்டின் கதவை தட்டி உள்ளார். ஆனால், கதவு தட்டப்பட்டு சிறிது நேரம் கழித்து வந்து கதவைத் திறந்த அக்கா சுப்புலட்சுமி, ரொம்பவும் பதற்றமாகவே காணப்பட்டு உள்ளார்.

இதனால், சற்று சந்தேகம் அடைந்த பிரதாப், “ஏன் பதற்றமாக இருக்கிறாய்?” என்று, அக்காவிடம் கேட்டுள்ளார். அப்போது, அக்கா சுப்புலட்சுமி துளியும் சம்மந்தம் இல்லாமல் மழுப்பலாகப் பதில் அளித்து உள்ளார்.

இதனால் இன்னும் சந்தேகம் அடைந்த பிரதாப், வீட்டின் உள்ளே சென்று, சுற்றும் முற்றும் தேடிப்பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் கட்டிலுக்கு அடியில், அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பிரதாப், அக்காவின் கள்ளக் காதலன் ஜானகிராமனை வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளார். இதனால், அவமானம் அடைந்த ஜானகிராமன், அவரிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடி உள்ளார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத பிரதாப், தன் அக்காவை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அருகிலிருந்த தலையணையால் அக்கா சுப்புலட்சுமியின் முகத்தை அழுத்தி அவரைக் கொலை செய்துள்ளார். அவர், உயிரிழந்த பிறகு நிதானத்திற்கு வந்த பிரதாப், அங்கிருந்து எண்ணூர் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுப்புலட்சுமிக்கு - ஜானகிராமனுடன் பல நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது என்றும், ஏற்கனவே குடும்பத்தினர் எச்சரித்தும், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கள்ளக் காதல் உறவை தொடர்ந்ததால், கொலையில் முடிந்துள்ளதாகவும் போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.