பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் பதறிப்போன மாணவிகளின் பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டனர். அதில், கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் முக்கிய விசாரணை நடத்தினர். 

இதில், கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் ஆவர்.

இதையடுத்து, அந்த 3 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். தொடர்ந்து, மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

முக்கியமாக, “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக தற்போது இரு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என்று, சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
அதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில், பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் பதியிலிருந்து அருளானந்தத்தை நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான உத்தரவை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் தற்போது பிறபித்துள்ளனர்.

மேலும், “பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அருளானந்தத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று, துணை சபாநாயகரும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

அதே போல், “பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதிமுகவினர் உட்பட அனைவரையும் சிபிஐ கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

அத்துடன், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது” என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.