கடந்த 2019ஆம் ஆண்டு , தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்தது தெரிய வந்தது. இந்த செய்தி தமிழகத்தையே மிரள வைத்தது. 


இந்த பிரச்சனை ஊடகங்களில் வெளி வந்ததும் பல அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 பெண்கள் அளித்த வாக்குமூலத்தால் பொள்ளாச்சி வழக்கில் இப்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த மூன்று 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கூறுகையில், சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவதால், ஒரு பெண், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கில் கைதானதையடுத்து அதிமுக பிரமுகர் அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.