தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.  தமிழகத்தை விட கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், முதல் அலையில் இருந்து தப்பித்தோம் என்று நினைத்த பலரும், தற்போது கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இப்படியாக, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,437 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,437 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டு உள்ளது. 

மேலும், “இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்து உள்ளது என்றும், சென்னையில் மட்டும் இன்று 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும், கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், “கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையானது 9,145 ஆக இருக்கிறது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 9 ஆக உள்ளது.  

கொரோனாவில் இருந்து இன்று 902 பேர் குணம் அடைந்து இன்றைய தினம் வீடு திரும்பி உள்ளனர்.

முக்கியமாக, அதிமுக எம்பி முகமது ஜான் பிரசாரத்தில் ஈடுபட வந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்துள்ளது.

அதே போல், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 40 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து உள்ளது. 

அதே போல், கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2010 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  

இதனிடையே, “வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போடலாம்” என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.