சென்னையில் ஆழ்கடலில் ஒரு இளம் ஜோடி திருமணம் செய்துகொண்ட நிகழ்வும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சென்னை நீலாங்கரை பகுதியில் கடலின் 60 அடி ஆழத்தில் இளம் ஜோடி, தண்ணீருக்குள் மூழ்கி மிகவும் ஆச்சரியமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சின்னதுரை என்ற இளைஞருக்கும், கோவையைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்தப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

தங்களது திருமணத்தைச் சற்று வித்தியாசமாக நடத்த வேண்டும் என சின்னதுரை திட்டமிட்டார். அதன் படி, ஆழ் கடலில் நீச்சல் பயிற்சியை சின்னதுரை மேற்கொண்டு வந்தார். 

அத்துடன், “எனது திருமணத்தைக் கடலுக்கு அடியில் வைத்து நடத்த வேண்டும்” என்கிற, தன்னுடைய விருப்பத்தைத் தனது பெற்றோர்களிடம் சின்னதுரை கூறியுள்ளார்.

பெற்றோர்களும் மகனின் ஆசைக்கு ஒப்புக் கொண்ட நிலையில், புதுச்சேரி பகுதியிலுள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவரை மணமக்கள் அணுகி முறையாகப் பயிற்சி பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தான், சென்னை நீலாங்கரை பகுதியில் நேற்று பாரம்பரிய உடைகள் அணிந்து படகின் மூலம் மணமக்கள் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு சென்றதும், மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டது. அதன் பிறகு, ஆழ்கடலில் மணமக்கள் இருவரும் குதித்த நிலையில், கடலுக்கு அடியில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற்றது. கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 60 அடி ஆழத்தில் மலர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் இந்த திருமணம் நடைபெற்றது.

அப்போது, பரஸ்பரம் மாலை மாற்றி மணமக்கள் இருவரும், திருமணம் செய்து கொண்ட நிலையில், வித்தியாசமாக நடந்த இந்த திருமணம் பலரையும் மிகப் பெரிய அளவில் ஆச்சரியமடையச் செய்தது. 

மிக முக்கியமாக, இந்தியாவில் ஆழ்கடலில் வைத்து நடைபெற்ற முதல் திருமணம் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக பேசிய மணமக்கள், “கடல் நீரை யாரும் மாசுப்படுத்த கூடாது என்கிற விழிப்புணர்வுக்காக, நாங்கள் கடலுக்கு அடியில் சென்று திருமணம் செய்துகொண்டோம்” என்று, தெரிவித்து உள்ளனர்.

இந்த வித்தியாசமான திருமண நிகழ்வு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. இதற்கு, பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.