இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பாடகி ரிஹானா, சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லை பகுதியில் விவசாயிகள் கடந்த 2 மாத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன், பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை 11 சுற்று பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்தவிதமான சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, கடந்த 26 ஆம் தேதி, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி நடத்திய போது திடீரென்று வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது வரை கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் மீண்டும் வரும் 6 ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர். 

இதனையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்கும் விதமாக, முற்றிலுமாக தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

அதே நேரத்தில், டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொது மக்களும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்து உள்ளார். 

அதில், “டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். 

மேலும், “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்றும், பாப் பாடகி ரிஹானா கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

அதே போல், உலக பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்றும் வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார்.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, “அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையைக் கனடா எப்போதும் ஆதரிக்கும்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகள் நிலை குறித்தும் அவர் கவலை” தெரிவித்தார். சில கனடா மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களும் இது போன்ற கருத்துக்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர்.

மிக முக்கியமாக, இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 36 எம்.பி.க்கள் இந்திய விவசாயியைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.

அதே போல், “மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், அவர்கள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும்” என்றும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. கருத்து தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே, இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரின் பதிவுகளால் டெல்லியில் நடைபெறும் போராட்டம் மேலும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.