“தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த கொரோனா சூழலை பயன்படுத்தி மத்திய அரசு முயல்வதாக” மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக நேற்றைய தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்க முடிவின் படி, “கொரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், தேர்வு ரத்து செய்யும் முடிவானது மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு” என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார்.

அத்துடன், “இந்த நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும் என்றும், பேரிடர் காலத்தில் மாணவர்கள் மன அழுத்தில் உள்ளனர் என்றும்,  அவர்களைத் தேர்வு எழுத கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான வழி காட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்றும், பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

அதாவது, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, பெற்றோர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக” நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து டிவிட்டரில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். 

அதன் படி, “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல், 102 தேர்வு மட்டும் ரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை” என்று, கடுமையாகச் சாடி உள்ளார்.

“நுழைவுத் தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள, கொரோனா சூழலை ஒன்றிய கல்வித் துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது” என்றும், மத்திய அரசு மீது மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மிக கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.

தற்போது, மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் இந்த விமர்சனம், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பேசும் பொருளாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.