ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் நடித்து வரும் திரைப்படம் அத்ரங்கி ரே. லாக்டவுனுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

மதுரையில் நடைபெற்று வந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்தது. டெல்லி படப்பிடிப்பை முடித்து விட்டு தற்போது ஆக்ரா சென்றுள்ளனர் படக்குழுவினர். ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் அருகே படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். ஷாஜகான் கெட்டப்பில் அக்ஷய் குமார் வெளியிட்ட புகைப்படம் மாற்றும் வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளி விருந்தாய் லக்ஷ்மி பாம் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து பெல் பாட்டம் படத்தில் நடித்து முடித்தார். சமீபத்தில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். படத்தின் பாடல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இசைப்புயல். படப்பிடிப்பு பணிகள் வேகமெடுப்பதால் விரைவில் படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தது என நடிகர் தனுஷ் பதிவிட்டிருந்தார். 

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். க்றிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங்கும் இதில்  நடிக்கவுள்ளனர். உலக புகழ் பெற்ற ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கவுள்ளனர்.