புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று முதல் டெல்லியில் சுழற்சி முறையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவர்கள், செவிலியர்களும் களமிறங்கி உள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.

முக்கியமாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து உள்ளன. இதனால், வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் பனியிலும், குளிரிலும் நடு நடுங்கி, தங்கள் உயிரையே பொருட்படுத்தாமல் இன்றுடன் 26 வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நாளுக்கு நான் பனி மற்றும் அதனால் ஏற்படும் குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான குளிரிலும் கூட விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் இன்றி துளியும் பின்வாங்காமல் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து இன்று வரை அமைதியான முறையில் போராடி வருகின்றனர். ஆனால, பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகள் மீது கருணை கொள்ளாமல், விவசாயிகள் போராட்டம் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் தன் பாட்டுக்கு இருப்பதாக பலரும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர். இதனால், போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள்  தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நிகழ்வாக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக விவசாயிகள் 
அறிவித்துள்ளனர். விவசாயிகள் சுழற்சி முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். 

அதாவது, தினமும் 11 விவசாயிகள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை டோல்கேட்களில் கட்டணம் செலுத்தா போராட்டம் நடத்தவும் விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.  

அத்துடன், 26 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டத்திகு ஆதரவு தெரிவித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். 

அதே நேரத்தில், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருவதும், மாற்று வழிகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களை பெரிய அளவில் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால், துளியும் விவசாயம் பற்றி தெரியாத டெல்லி மக்களும், விவசாயிகள் மீது அக்கறைகொண்ட மக்களும், எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதனிடையே, வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆனால், அதைப்பற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாத மோடி அரசு கை கட்டி வேடிக்கை பார்த்து வருவதால், விவசாயிகளின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். அத்துடன், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் ஏராளமானோர் குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.