8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், தாயின் கள்ளக் காதல் தான் காரணமாக என்று, காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி நகரைச் சேர்ந்த 20 வயதான கீர்த்திகாவிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மணி என்பவருடன் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்த அந்த தம்பதிக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தன. 

அதன் தொடர்ச்சியாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகரித்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது இரு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த கீர்த்திகாவுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயது முனியப்பன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் பழக்கமாக மாறி, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கள்ளக் காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிவகங்கையில் உள்ள தனது தோழி வீட்டிற்கு முனியப்பனுடன், கையில் ஒரு குழந்தையுடன் கீர்த்திகா சென்று உள்ளார். ஆனால், தனது மற்றொரு 8 மாத குழந்தை சூர்யாவை, சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டியின் பாதுகாப்பில் விட்டு விட்டுச் சென்றுள்ளார். 

இதனையடுத்து, கடந்த 1 ஆம் தேதி, பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை சூர்யாவுக்கு மார்பு சளி உள்ளதால், மருத்துவமனையில் காண்பிப்பதற்காக சென்னையில் இருந்த 8 மாத குழந்தையை, சிவகங்கைக்கு அழைத்துச் சென்று உள்ளார் தாயார் கீர்த்திகா.

இதனையடுத்து கடந்த 3 ஆம் தேதியன்று, திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சிவகங்கையில் உயிரிழந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை, தனது பாட்டியிடம் கீர்த்திகா தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பாட்டி, குழந்தையின் இறப்பில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால், தனது பேர குழந்தை சூர்யாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பாட்டி வள்ளி, சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், குழந்தையின் உயிரிழப்பு குறித்து தாயார் கீர்த்திகா மற்றும் அவரது காதலன் முனியப்பன், ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.